பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மறைந்த ஜெ.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது முத்துராமலிங்க தேவருக்கு 13 அரை கிலோ தங்கத்தால் ஆன கவசத்தை அணிவித்தார். நந்தனத்தில் தேவருக்கு திருவுருவச் சிலை அமைத்து பெருமைப்படுத்தினார். மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்" என்றார்.
ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே வாகனத்தில் பசும்பொன் நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றதே? என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது குறித்து எனக்கு தெரியவில்லை, வந்தால் தான் தெரியும் வந்தால் அது குறித்து கருத்து சொல்கிறேன்" என்று கூறினார்