For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்

பிரபல இயக்குநர் வி.சேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
07:39 PM Nov 14, 2025 IST | Web Editor
பிரபல இயக்குநர் வி.சேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபல இயக்குநர் வி சேகர் காலமானார்
Advertisement

திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன் - பட்டம்மாள் தம்பதிக்கு 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்தவர் வி.சேகர். இவருக்கு தமிழ்செல்வி, காந்திமதி என்ற இரண்டு சகோதரிகளும், அண்ணாத்துரை என்கிற ஒரு சகோதரரும் உள்ளனர். நெய்வாநத்தம் பள்ளியில் 5வது வரை படித்த வி.சேகர், வேட்டவலம் உயர்நிலை பள்ளியில் உயர்நிலை படிப்பை முடித்தார். பியூசி படிப்பை திருவண்ணாமலையில் முடித்தவர், உறவினர் செ.கண்ணப்பன் உதவியால் ஏவி.எம்.ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் தனது 19 வயதில் உதவியாளராக சேர்ந்தார்.

Advertisement

பிறகு செ.கண்ணப்பன் உதவியால் மாநகராட்சி சுகாதார துறையில் மலேரியா ஒழிப்பு பணியாளராக வேலைக்கு சேர்ந்தவர், தொடர்ந்து 15 ஆண்டுகள் அந்த பணியை செய்தார். அதே நேரத்தில் நந்தனம் கலை கல்லூரியில் பி.ஏ. படிப்பையும், அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பையும் படித்து முடித்தார்.

சிறு வயது முதல் வாசிப்பு பழக்கம் கொண்ட வி.சேகர் உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். தான் உணர்ந்த கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க சினிமா மீடியத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தார். அப்போது தயாரிப்பு நிர்வாகி நாராயணனின் நட்பு கிடைக்க அவர் மூலமாக கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய 'கண்ண தொறக்கனும்சாமி' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கே.பாக்யராஜின் உதவியாளராக  பணியாற்றினார்.

இதனையடுத்து, வி.சேகர் 'நீங்களும் ஹீரோதான்' என்ற தனது முதல் படத்தை இயக்கினார். இந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி அடையாததால் மீண்டும் மாநகராட்சி சுகாதார துறையில் மலேரியா ஒழிப்பு பணியாளர் பணியை தொடர்ந்தார். இதற்கிடையே, அவர் இயக்கிற 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது. அந்தப் படம் தெலுங்கு மொழியில் 'மாமா காரு' என்கிற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வசூலில் சாதனை படைத்தது. மேலும், இந்தி, ஒரிசா போன்ற மொழிகளிலும் 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படம் ரீமேக் ஆனது.

அதன் பிறகு 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'விரலுக்கு ஏத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானார். மேலும், தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்த வி.சேகர், பிரபு நடித்த 'பொண்ணு பாக்கப்போறேன்' படத்திற்கு திரைக்கதை எழுதினார். மேலும், சின்னத்திரையில் 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'வீட்டுக்கு வீடு' தொடர்களையும் எடுத்திருக்கிறார்.

தங்கர்பச்சான் இயக்கிய 'பள்ளிக் கூடம்' படத்தில் கல்வி அதிகாரியாக நடித்தார். இவர் தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த மாமா செ.கண்ணப்பனின் மகள் தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சேகர் இன்று மாலை காலமானார்.

Tags :
Advertisement