மக்களவையில் எஸ்.ஐ.ஆர் குறித்து டிசம்பர் 9 ஆம் தேதி விவாதம்..!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டமானது வருகிற 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.
இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு நாள்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
மேலும் இன்று மக்களவையில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துடன் சுமூகமாக நடத்துவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
”மக்களவை சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது, மக்களவையில் , டிசம்பர் 8 ஆம் தேதி திங்கள் கிழமை நண்பகல் 12 மணி முதல் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து விவாதம் நடத்தவும், டிசம்பர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர் குறித்த விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு விவாதங்களுக்கும் தலா 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்படின் நேரம் அதிகரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.