”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” - நயினார் நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை ஆதீன மடத்திற்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“மதுரை ஆதினம் எங்கள் ஊர்காரர் என்பதால் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றேன். மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதினம் அழைப்பு விடுத்திருந்தார் அதற்காக வருகை தந்தேன். ஆதினத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சியை கொண்டுவருவோம். அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனை என்பது வெறும் கண்துடைப்பான விசயம். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை.
ஆயிரம் தடுப்பணை கட்டுவோம் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார். ஆனால் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. போன முறை பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஏனென்றால் இது தேர்தலுக்கான அரசு.
போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை இதையெல்லாம் தாண்டி மக்கள் ஓட்டுபோடுவார்களா?. வெகுவிரைவில் மக்கள் மனசில் மாற்றம் வரும், எதிர்பார்ப்பதை விட மாறும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக எங்கள் கூட இல்லை. நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன். அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்.
கலவரத்தை தூண்ட கூடிய கதாநாயகனே சு.வெங்கடேசன் தான். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.