நடிகை கஸ்தூரி தலைமறைவு? - தீவிரமாக தேடும் தனிப்படைக் காவல்துறையினர்!
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். எனினும் அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணைக்கு வரும்படி, சம்மன் வழங்கச் சென்றபோது ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரியின் வீடு பூட்டியிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.