கர்ப்பிணியை தாக்கி விட்டு தங்கையை அழைத்துச் சென்ற இளைஞர்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தன் - லதா தம்பதி. இவர்களுக்கு தாரண்யா, சரண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தனது மூத்த மகள் தாரண்யாவை கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற ராணுவ வீரருக்கு திருமணம் முடித்து வைத்தனர். 9 மாத கர்ப்பிணியான தாரண்யா தனது தாய் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் அல்லிநகரத்தை சேர்ந்த விக்கிராஜ் என்பவர் தாரண்யாவின் தந்தை வீட்டிற்கு வந்து அவரது தங்கை சரண்யாவை அழைத்து செல்ல முயன்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாரண்யாவை, விக்கி மற்றும் சரண்யா உதைத்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த தாரண்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வந்த அவர் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் தனது பெற்றோருடன் சேர்ந்து புகார் அளித்தார்.
புகார் அளித்து தற்போது வரை ராயப்பன்பட்டி காவல்துறையினர்
கர்ப்பிணிப் பெண்ணை தாக்கியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து தாரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தின் முன் அமர்ந்து முற்றுகை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
ராயப்பன்பட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய முறையில் வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறோம். என்று கூறியதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.