"கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி.." - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இபிஎஸ் வாழ்த்து!
பீகார் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில் இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்ததில் மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகியது.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக பீகாரில், மீண்டும் பாஜக ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது. இந்த நிலையில், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பை எட்டி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணியின் பொய்களையும், ஜனநாயகத்தை காக்கும் அமைப்புககளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர். கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அதிமுக சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அவரின் அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வலுவான வெற்றி பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.