”மேலும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன” - சென்னை திரும்பிய முதலமைச்சர் #MKStalin பேட்டி
இன்னும் பல நிறுவனங்கள் வரும்காலத்தில் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன என சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அங்கு அவருக்கு திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
அமெரிக்க பயணம், தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனை பயணமாக அமைந்திருக்கிறது. உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிலை தொடங்குவதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 28.07.2024 அன்று நான் அமெரிக்கா சென்றேன். 12.09.2024 வரை அமெரிக்காவில் இருந்தேன். இந்த 14 நாட்களும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். இதில் 18 நிறுவனங்கள் ஃபார்ச்சுன் 500 நிறுவனங்கள். இந்த சந்திப்பின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இந்த 19 நிறுவனங்கள் மூலமாக, 7,618 கோடி முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது. இதன் மூலம், 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 29.08.2024 அன்று சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 100- க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன்.
இன்னும் பல நிறுவனங்கள் வரும்காலத்தில் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இதற்கெல்லாம் மகுடம் வைத்த மாதிரி, தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம் எங்கள் வேண்டுகோளை ஏற்று சென்னை மறைமலை நகரில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
நான் முதல்வன் திட்டம் வழியாக வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி வழங்குவதற்கான ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
31.08.2024 அன்று சான்பிரான்சிஸ்கோவிலும், 07.09.2024 அன்று சிகோகோவிலும் நடைபெற்ற அமெரிக்கவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. அமெரிக்க தமிழர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் செய்திருக்கக்கூடிய அனைத்து நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.